Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM

லடாக்கில் நிலைமையை மாற்ற முயன்றது சீனா: ஆண்டறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதியில் சீனப் படைகள் பலவந்தமாக அங்குள்ள நிலைமையை மாற்ற முயன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங்ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் சீனப் படையினர்அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கினர். இது, கடந்த ஜூன் 15-ம் தேதிஇரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தைதணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கடைசியாக கடந்த நவம்பரில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். படைகளை முற்றிலும்விலக்கிக் கொள்ள வேண்டும், கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரலுக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை அர்த்தமுள்ளதீர்வு உருவாகவில்லை என மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் கூறினார்.

இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பாக கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சகம் மறு ஆய்வு செய்தது. இது தொடர்பான அறிக்கை கடந்த 1-ம் தேதி வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிகளில் சீனப்படைகள் பலவந்தமாக அங்குள்ள நிலைமையை மாற்ற முயன்றன. படை வீரர்களை குவித்தும் இந்தியவீரர்களுக்கு எதிராக வழக்கத்துக்கு மாறான ஆயுதங்களை பயன்படுத்தியும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஒருதலைப்பட்சமான மற்றும் ஆத்திரமூட்டும் செயல்கள் மூலம் எல்லையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலைமையை மாற்றசீனப் படையினர் பலவந்தமாக முயன்றபோதிலும் அவை உறுதியுடன் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் மூலம் கிழக்கு லடாக்கில் நாம் உரிமை கோரும் பகுதிகளின் புனிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிரியின் எந்தவொரு அத்துமீறலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தன்னை வலுப்படுத்திக்கொண்டது. விமானப் படை உதவியுடன் வீரர்களையும் ஆயுதங்களையும் அங்கு விரைவாக கொண்டு சேர்த்தது. படைபலத்தை அதிகரிப்பதற்கு உதவியாக சாலைகள், பாலங்கள் மற்றும் வாழ்விடங்கள் விரைவாக உருவாக்கப்பட்டன. எல்லையில்பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் சீனப் படையினர் ஈடுபட்டபோதிலும் இரு நாடுகள் இடையிலான உடன்பாடுகளை ராணுவம் மதித்து நடந்து கொண்டது.

இந்திய ராணுவம் தற்போது பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலைப்பாங்கான நிலைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் இந்திய ராணுவம்முழுமையான ஆதிக்கம் செலுத்தவும் சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடிகிறது.

சீரற்ற வானிலை மற்றும் கடும்குளிரிலும் நமது வீரர்கள் இப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. சீனப் படையினரின் எந்தவொரு அத்துமீறலையும் எதிர்கொள்ள இந்தியா ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எனினும் பிரச்சினையை இணக்கமான முறையில் தீர்க்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x