

பிரிட்டனுக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து வேண்டாம் என எச்சரிக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட்.
உருமாறிய கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்ட நிலையில் உலக நாடுகள் பலவும் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தது.
இந்தியாவும் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை தடை செய்தது. ஆனால் வரும் 7-ம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதனைக் கண்டித்து அசோக் கெலாட் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், "பிரிட்டனின் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை அனுமதிப்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த ஜனவரி 2020-ல் இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்த நிலையே வந்திருக்காது" எனப் பதிவிட்டிருந்தார்.