

கரோனா தடுப்பூசி அவசர கால அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் அது பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை தயாரித்தன. இந்த இரு மருந்துகளுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி வழங்கிய நிலையில், அவசர கால அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் அது பயன்பாட்டுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதிலிருந்து 10 நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். இறுதி முடிவை அரசாங்கமே எடுக்கும்.
தடுப்பூசி வழங்குவதில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் யாரும் பயனாளர்கள் எனத் தங்களைத் தாங்களே பதிவு செய்துகொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அவர்களின் முழுவிவரமும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. கோ-வின் தடுப்பூசி வழங்கல் ஆவணக் காப்பகத்தில் முன் களப்பணியாளர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கானவர்களை தேர்வு செய்யும் பணி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் குறைந்துவருகிறது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 2.5 லட்சத்தின் கீழ் இருக்கிறது. மருத்துவ்மனையில் உள்ள தொற்றாளர்களில் 44% பேருக்கு தீவிரமான அறிகுறியும் 56% பேருக்கு மிக லேசான அறிகுறியும் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,375 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. 29,091 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 201 பேர் இறந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,03,56,845 என்றளவில் இருக்கிறது" என்று கூறினார்.