டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்துக்கு  அனுமதி:  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல், அரசின் அறிவிக்கையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இன்று தீ்ர்ப்பளித்து.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கான்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகள் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர்.

இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. டெல்லியில் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் கட்டிடத்துக்கு எவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், “ புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் பூமி பூஜையை கடந்த 10-ம் தேதி நடத்தலாம் ஆனால், மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும்வரை கட்டுமானங்கள் இடிக்கப்படக்கூடாது. புதிதாகக் கட்டுமானம் கட்டப்படக்கூடாது. மரங்கள் எதையும் வெட்டக்கூடாது” என உத்தரவிட்டு அனுமதியளித்தனர்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 2020, டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடந்தது, பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணை முடிந்து, நீதிபதிகல் கான்வில்கர் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தனர்.

இதில் மூன்று நீதிபதிகளில் தினேஷ் மகேஸ்வரி, கான்வில்கர் ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் மத்திய அரசின் புதிய நாடாளுமன்றம் கட்டும் விஸ்டா திட்டத்துக்கு அனுமதி வழங்கினர். மத்திய சுற்றுச்சூவல்துறை அனுமதி வழங்கியதையும், திட்டத்துக்காக நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையையும் செல்லுபடியாகும் என இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தனர்.

மேலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது, தூசிகள் வெளியே வராதவகையில் தூசிகளை ஈர்க்கும் வகையிலான கருவிகளையும் பயன்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினர்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்கினாலும், நிலத்தை வேறுபயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த விவகாரத்தில் முரண்பட்டு தீ்ர்ப்பளித்தார். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் குழுவில் அனுமதி முழுமையாகப் பெறவில்லை, மக்களின் பங்களிப்பும் இல்லை எனக் கூறி தனியாக தீர்ப்பு வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in