Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

திருப்பதியில் 10 நாள் சொர்க்க வாசல் தரிசனம்: ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைகுண்ட ஏகாதசியான கடந்த டிசம்பர் 25-ம் தேதி முதல், ஜனவரி 3-ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை பக்தர்களுக்காக தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்திருந்தது. முதன்முறையாக இம்முறை ஆகம வல்லுநர்கள், ஜீயர்கள், சில பீடாதிபதிகள், மடாதிபதிகளின் அனுமதியோடும் ஆலோசனைகளை அனுசரித்தும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 நாட்களில் 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமியை சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்தனர். ரூ.300 ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் 1.83 லட்சம் பக்தர்களும், திருப்பதியில் வழங்கிய இலவச தரிசன டோக்கன் மூலம் 90,852 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் தரிசித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் 20.82 லட்சம் லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.29.09 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 50,894 அறைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் ரூ.227 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் 90,290 பக்தர்கள் தலைமுடிகாணிக்கை செலுத்தி உள்ளனர்.4.52 லட்சம் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜவஹர் ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x