சாகர்மாலா; நீர் விமான சேவை: கப்பல் அமைச்சகம் தொடங்குகிறது

சாகர்மாலா; நீர் விமான சேவை: கப்பல் அமைச்சகம் தொடங்குகிறது
Updated on
1 min read

சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் நீர் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு நீர் விமான சேவை ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது.

அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நீர் விமான சேவை என்பது இந்தியாவில் கடல் பகுதியிலும், வாய்ப்புள்ள ஆறுகளிலும் தொடங்கப்படும். நீர் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, டெல்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன.

இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in