

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜனவரி 8 அன்று மீண்டும் சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு தரப்பில் 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
எனினும், கடந்த வாரம் நடந்த 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் மசோதா, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட மின்சார அவசர சட்டம் ஆகிய இரண்டையுமே திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
எனினும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இந்தநிலையில் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இந்த ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய வர்த்தக தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்காக கூட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
முந்தைய பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதை மனதில் கொண்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு திறந்த மனதுடன் தீர்வுகளைக் காண அரசு உறுதி பூண்டுள்ளது என்று தோமர் கூறினார். தீர்வை எட்டுவதற்காக இரு தரப்பும் முன் வந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு, வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமரசத்தை எட்டுவதற்காக வேளாண் சட்டங்களின் உட்பிரிவுகள் வாரியான பேச்சுவார்த்தையையும் நடத்தலாம் என்று தோமர் கூறினார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய இரு தரப்பினரும், 2021 ஜனவரி 8 அன்று மீண்டும் சந்திக்க முடிவெடுத்தனர்.