

தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்க சிபிஐ-க்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004-07 காலகட்டத்தில், தயாநிதி மாறன் மத்திய அமைச்ச ராக இருந்தபோது, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப் புகளை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்ெகனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் என்ற முறையில் ‘சேவை இணைப்புகள்’ பெற தயாநிதி மாறனுக்கு உரிமை இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் இணைப்புகள் பெற்றார். அவருக்கு முன்பிருந்த அமைச்சர்களும் சேவை இணைப்புகள் பெற்றுள்ளனர். இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை’ என்றார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘தயாநிதி மாறன் பெற்ற இணைப்புகள் அனைத்தும் முறைகேடானவை. இவை யாருடனும் பேசுவதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவரது குடும்ப நிறுவனமான சன் டிவி டேட்டாக்களை ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்டன. இத்தகைய இணைப்புகளைப் பெற அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை’ என்று வாதிட்டார். மேலும், தயாநிதி மாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவை படித்துப் பார்த்து பதில ளிக்க அவகாசம் வழங்கும்படி கோரினார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.