

கேரளாவில் இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மனிதர்களுக்குப் பரவவில்லை என்றும் மாநில வனத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார்.
கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவுவதாகக் கூறப்படுகிறது. நீண்டூரில் உள்ள வாத்து பண்ணை ஒன்றிலிருந்து பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக கோட்டயம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பண்ணையில் சுமார் 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இரு மாவட்டங்களிலும் தற்போது வரை சுமார் 12,000 வாத்துகள் உயிரிழந்துள்ளன. மேலும் சுமார் 36,000 வாத்துகள் கொல்லப்பட வேண்டும்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கே.ராஜு கூறியதாவது:
''ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போபாலில் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் கேரளாவில் அனுப்பி வைக்கப்பட்ட நோய் தாக்கிய பறவைகளைப் பரிசோதித்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் கேரளாவில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுக்குள் உள்ளது.
ஆலப்புழா மற்றும் கோட்டயம் இருப்பிடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். விரைவான அதிரடிப் படைகள் அனுப்பப்படும். மோசமான பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் கண்காணிக்கப்படும். இந்நோய் மனிதர்களுக்குப் பரவவில்லை''.
இவ்வாறு அமைச்சர் ராஜு தெரிவித்தார்.