உ.பி.யில் மயானக் கூரை இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி; விசாரணையில் யாரையும் காப்பாற்ற முயல வேண்டாம்: மாயாவதி வேண்டுகோள்

மாயாவதி | கோப்புப் படம்
மாயாவதி | கோப்புப் படம்
Updated on
1 min read

உ.பி.யில் மயானக் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 24 பேர் பலியான சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முராத் நகர் மயானத்தில் ஜெய் ராம் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கில் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மழை வரவே அனைவரும் தகன மேடை அருகே கூரையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் தகன மேடையின் கூரை இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்தில்லேயே 17 பேர் பலியாகினர். மீட்புப் படை வந்து அனைவரையும் மீட்டது.

எனினும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்ததாகவும், இச்சம்பவத்தில் மொத்தம் 24 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''முராத் நகரில் உள்ள மயானக் கூரை இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 24 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிகுந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வருத்தத்தைத் தாங்குவதற்கான பலத்தை இயற்கை அளிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தை உத்தரப் பிரதேச அரசு முறையாகவும், சரியான நேரத்தில் விசாரிக்கவும், இச்சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யவும் வேண்டும். விசாரணையிலிருந்து யாரையும் காப்பாற்ற முயல வேண்டாம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அவர்கள் தகுந்த நிதி உதவியை வழங்க வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை".

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in