தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப டெல்லியில் தமிழ் அகாடெமி அமைப்பு:  முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
Updated on
1 min read


டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ்சங்க உறுப்பினரை நியமித்தும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்வரும், கலை, கலாச்சார மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடெமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடெமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அகாடெமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

தேசத்தின் அனைத்து மாநில மக்களும் டெல்லியில் பணிபுரிந்து வருவதால், கலாச்சாரச் செரிவு மிக்க நகராக டெல்லி இருந்து வருகிறது. பன்முகக் கலாச்சாரம்தான் டெல்லியை சிறப்பாக வைத்திருக்கிறது. தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் வந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடெமி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அகாடெமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்

இவ்வாறு ஷிசோடியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in