

இந்தியர்களால் முடியும் என்று பெருமைப்பட்டுக்கொள்ளவே காங்கிரஸ் கட்சி மறுக்கிறது என்று கரோனா தடுப்பு மருந்து குறித்து காங்கிரஸ் தலைவர்கள் செய்த விமர்சனத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன
இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. ஆனால், இந்தியாவில் 3-வது கிளினிக்கல் பரிசோதனையை முடிக்காத போது எவ்வாறு இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தது. சமாஜ்வாதிக் கட்சியும் கரோனா தடுப்பு மருந்தைக் கிண்டல் செய்து விமர்சித்தது.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியர்களால் முடியும் என காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பெருமைப்படமாட்டார்கள். கரோனா தடுப்பு மருந்து சந்தேகமாக இருக்கிறது, மோசடியானது எனப் பொய்களையும், அது எவ்வாறு சிலரின் சொந்த நலன்களுக்காக, திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதையும் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். தேசத்தின் மக்கள் இதுபோன்ற அரசியலை ஒதுக்கிவிட்டார்கள், எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறார்கள்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நம்நாட்டில் வந்து ஓர் ஆண்டுக்குள், நமது விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிப்பாளர்கள் கடினமாகப் பணியாற்றி, வைரஸிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளார்கள். ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோபம், ஏளனம், அவமதிப்பு செய்யும் நோக்கத்துடன் இருக்கின்றன.
தோல்வி அடைந்த அவர்களின் அரசியல், தீயநோக்கம் கொண்ட திட்டங்கள் போன்றவற்றால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களின் மனதில் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்க முயல்கிறார்கள். மற்ற விவகாரங்களில் அரசியல் செய்யுங்கள், மக்களின் வாழ்க்கையிலும், கடினமான வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதை தவிருங்கள் என்று நான் எதிர்க்கட்சிகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.