

இந்திய அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையே 2008-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் அணு சக்தி திட்டங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் சர்வதேச அணுசக்தி முகமை கூடுதல் ஆய்வு நடத்த மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக வியன்னாவில் உள்ள அந்த அமைப்புக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹைதராபாதில் உள்ள 6 அணு உலைகள், மகாராஷ்டிரத்தின் தாராபூரில் அமைந்துள்ள 4 அணு உலைகள், ராஜஸ்தான் அணு மின் நிலையத்தின் 6 அணு உலைகள், கூடங்குளத்தின் 2 அணு உலைகள், குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையத்தின் 2 அணு உலைகள் என மொத்தம் 20 அணு உலைகளில் சர்வதேச அணுசக்தி முகமை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
இதன்மூலம் இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல இந்தியா தயாராக இருப்பதை உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு மத்திய அரசு உணர்த்தியுள்ளது.