

நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின் ஒப்பந்தப் புள்ளி விவகாரத்தில் பெங்களூரு கூடுதல் ஆணையர் ஹேமந்த் நிம்பல்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் உள்துறை செயலாளராக இருந்த ரூபாபணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூபா பதவி வகித்தார். அப்போது சிறையில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்தியநாராயண ராவுக்கும் ரூபாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ரூபா சிறையில் இருந்து சசிகலா வண்ண உடையில் வெளியே செல்வது போன்ற சிசிடிவி காட்சி பதிவுகளை வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சசிகலா கடும் நெருக்கடிக்கு ஆளானார். இதனிடையே கடந்த ஆகஸ்டில் ரூபா கர்நாடக உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சிறைத்துறையும் இவரின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் சசிகலா விடுதலையாவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நிர்பயா பாதுகாப்பு திட்டம் (பெங்களூரு பெண்கள் பாதுகாப்பு) தொடர்பாக பெங்களூரு மாநகர கூடுதல் ஆணையர் ஹேமந்த் நிம்பல்கருக்கும் ரூபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அந்த திட்டத்தின் கீழ் பெங்களூரு முழுக்க சிசிடிவி கேமராக்களை வாங்க ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதில் முறைகேடு நடந்திருப்பதாக ரூபா புகார் தெரிவித்தார்.
இதை மறுத்த ஹேமந்த் நிம்பல்கர் ரூபா ஊடக விளம்பரத்திற்காக அவதூறு பரப்புவதாக பதிலளித்தார். இந்த விவகாரத்தில் இருவரும் உயர் அதிகாரிகளிடம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் ரூபா உள்துறை செய லாளர் பதவியில் இருந்து மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து ரூபா தனது சமூக வலைதளத்தில், ‘‘பணியில் நேர்மையாக செயல்படுவதால் மற்றவர்களைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இத்தகைய பணியிட மாற்றங்களால் சோர்ந்து விடாமல் தொடர்ந்து சமரசமின்றி பணியாற்றுவேன். ஒருபோதும் நேர்மையாக இருப்பதில் இருந்துபின்வாங்க மாட்டேன். நான் தெரிவித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு என்னை பணியிடமாற்றம் செய்திருப்பது நியாயமான அணுகுமுறை அல்ல'' என பதிவிட்டுள்ளார்.
சசிகலாவின் சிறை முறைகேட்டு வழக்கை ரூபா கிளப்பிவிடுவார் என சசிகலாவுக்கு நெருக்க மானோர் அச்சமடைந்திருந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சசிகலாவின் விடுதலைக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்புகுறைந்திருப்பதால் அவர் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது.