மத்திய அரசு- விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே இன்று 7-ம் கட்ட பேச்சுவார்த்தை: கடுங்குளிரிலும் சட்டை இன்றி போராடும் விவசாயிகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களைஎதிர்த்து டெல்லியில் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்தியஅரசு இன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு தரப்பில் 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

எனினும், கடந்த வாரம் நடந்த 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் மசோதா, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட மின்சார அவசர சட்டம் ஆகிய இரண்டையுமே திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

எனினும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 7-வது கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு இன்று நடத்துகிறது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத் துறை இணையமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் தலைமை வகிக்கும் இந்த பேச்சுவார்த்தையில் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறும்போது, “விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நாளை (இன்று) தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இதனிடையே, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாககுளிருடன் சேர்த்து பெரும்பாலான இடங்களில் பலத்த மழையும் பெய்தது. ஆனால் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சட்டை அணியாமல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறும்போது, “குளிர் காலங்களில் அதிகாலையிலேயே வயலுக்கு சென்று நீர் பாய்ச்சுவது எங்கள் வழக்கம். எனவே குளிர் எங்களை ஒன்றும் செய்துவிடாது. எங்கள் போராட்டத்தின் தீவிரத்தை அரசு உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு சட்டை அணியாமல் போராடி வருகிறோம். இதனால் எங்கள் உயிர் பிரிந்தால் கூட கவலைப்பட மாட்டோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் நடத்துவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in