

'இந்து சவுதி'யாக இந்தியா மாறி வருவதாக வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிரபல பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரி ரத்து செய்யப்பட்ட பின்னணியில் தஸ்லிமா இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிவசேனா மிரட்டலால் மும்பையில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த பாடகர் குலாம் அலியின் கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இந்து சவுதியாக மாறுகிறது.
குலாம் அலி ஒன்றும் ஜிகாதி இல்லை. அவர் ஒரு பாடகர், தயவு செய்து ஜிகாதிகளுக்கும் பாடகருக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்" என்று தஸ்லிமா கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் குலாம் அலியின் (74). இவரது இசை கச்சேரி நாளை மும்பையின் சண்முகானந்தா ஹாலில் நடைபெற இருந்தது. பல்வேறு இந்திய சினிமாக்களில் பாடியவரும், புகழ்பெற்ற கசல் பாடகருமான இவரது நிகழ்ச்சியைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சிவசேனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நிகழ்ச்சி நடத்த அழைப்பு
இதனிடையே, பாடகர் குலாம் அலி டெல்லியில் இசை கச்சேரி நடத்திக் கொள்ளலாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி கலாசார அமைச்சர் கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இசைக்கு எல்லையே கிடையாது. #BanTheBan (sic). குலாமுக்கு மும்பையில் நிகழ்ச்சி நடத்த இடம் தரவில்லை என்றால் நாங்கள் அவரை டெல்லிக்கு அழைகிறோம். இங்கு அவர் கோலாகலமாக நிகழ்ச்சி நடத்தலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.