

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் அவரது பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அறை எண் 4 அத்வானிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அந்த அறையைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அந்த அறையில் அத்வானியின் பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவைச் செயலரிடம் கேட்டபோது, அறை ஒதுக்கீடு தங்களது பணி அல்ல என்று தெரிவித்துவிட்டார். அத்வானிக்கு புதிய அறை ஒதுக்கப்படுமா என்பது குழப்பமாகவே உள்ளது.
அவருக்கு தனி அறை ஒதுக்கப்படவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில்தான் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மக்களவையில் அத்வானி எந்த இருக்கையில் அமருவது என்பதிலும் குழப்பம் நீடித்தது. காலையில் அவர் அவையில் நுழைந்ததும் 2-வது வரிசையில் அமர்ந்தார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வற்புறுத்தி அவரை முதல் வரிசையில் அமரச் செய்தார். எனினும் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜுக்கு அடுத்தே அவர் அமர்ந்தார்.
பிற்பகலில் அவர் அவைக்கு வந்தபோது சிறிது நேரம் இருக்கையைத் தேடி அலைந்தார். பின்னர் 8-வது வரிசையில் அமர்ந்தார்.