

கரோனா தடுப்பு மருந்துகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
ஆனால் பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3-வது கிளினிக்கல் பரிசோதனையை முடிக்காத போது எவ்வாறு இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனந்த் சர்மா, சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இதுகுறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சோமானி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
“போதுமான அளவு ஆலோசனை நடத்தியபின், மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) வல்லுநர் குழு அளித்த பரிந்துரையை ஏற்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்கு இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு சிறிய அளவு இருந்தாலும், நாங்கள் ஒருபோதும் அனுமதியளித்திருக்கமாட்டோம். இந்த இரு தடுப்பு மருந்துகளும் 100 சதவீதம் பாதுகாப்பானவை. இதுகுறித்த சில தகவல்கள் வெளி வருவதில் உண்மையில்லை. ’’ எனத் தெரிவித்தார்.