

இமயமலையின் ரோஹ்தாங்கில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதை அருகே பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 300க்கும் அதிகமானோரை இமாச்சலப் பிரதேச காவல்துறை மீட்டுள்ளது.
இமயமலைச் சாரலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் நடுப்பகுதி மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் ஜனவரி 3 முதல் 5 வரை மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி மழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. இதனால் கடந்த செவ்வாய் முதலே இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்பின்படி, வரும் நாட்களில் சுரங்கப்பாதையைச் சுற்றி கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இமயமலையில் 10,040 அடி உயரத்தில் 9.02 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையைக் காண ஒவ்வொருநாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த சுரங்கப்பாதை கடந்த அக்டோபரில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டதிலிருந்து சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
சனிக்கிழமை காலை புதியதாக ஏற்பட்ட பனிப்பொழிவில் ரோஹ்தாங்க்கில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதை அருகே 300க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரையும் இமாச்சலப் பிரதேச காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது.
இதுகுறித்து குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் கூறியதாவது:
ரோஹ்தாங் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் சனிக்கிழமை காலை அடல் சுரங்கப்பாதையைத் தாண்டிவிட்டனர், ஆனால் மாலையில், பனிப்பொழிவு காரணமாக லாஹவுலில் எந்த ஓய்வு இடத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மணாலி என்ற இடத்திற்கு திரும்பும்போது நடுவழியில் அவர்கள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர்.
பனிப்பொழிவின் காரணமாக வழுக்கும் சாலைகளில் செல்லமுடியாமல் மணாலிக்கு செல்லும் வாகனங்கள் திணறின. நடுவழியிலேயே பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த காவல்துறை குலு மாவட்ட போலீசாருடன் இணைந்து லஹவுல்-ஸ்பிட்டி காவல் படை ஒன்றை மீட்பு வாகனங்களுடன் சனிக்கிழமை மாலையில் சுரங்கப்பாதை வழியாக அனுப்பியது.
இதில், 48 இருக்கைகள் கொண்ட பேருந்து உள்ளிட்ட 24 இருக்கைகள் கொண்ட காவல்துறை பேருந்து மற்றும் ஒரு போலீஸ் விரைவு மீட்புக் குழு (கியூஆர்டி) வாகனம் உட்பட சுமார் 70 வாகனங்கள் மீட்கப்பட்டன. இதில் பனிப்பொழிவில் சிக்கிய 300க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கையில் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மணாலியின் காவல்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர், சிறிது நேரத்திற்குப் பின்னர் எல்லை சாலை அமைப்பு (பி.ஆர்.ஓ) மீட்புக்குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது. மீட்பு நடவடிக்கை சனிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவுக்குப் பின் தொடர்ந்தது.
சிக்கித் தவித்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் துண்டி மற்றும் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டலில் இருந்து அதிகாலை 12.33 மணி வரை மீட்கப்பட்டு மணாலியில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எஸ்பி மேலும் கூறுகையில், மணாலி காவல் நிலைய அதிகாரி தலைமையிலான பணியாளர்கள் குழு வேறு யாராவது சிக்கிக்கொண்டார்களா என தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.