ஆக்ஸ்போர்டு மற்றும் பாரத் பயோடெக் கரோனா தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்குப் பயன்படுத்தலாம்: மத்திய அரசு அனுமதி

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சோமானி  : படம் ஏஎன்ஐ
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சோமானி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read


இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் மருந்துக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(டிசிஜிஐ) இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனமும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனமும் மருந்து தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சோமானி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

“ போதுமான அளவு ஆலோசனை நடத்தியபின், மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) வல்லுநர் குழு அளித்த பரிந்துரையை ஏற்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்கு இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு சிறிய அளவு இருந்தாலும், நாங்கள் ஒருபோதும் அனுமதியளித்திருக்கமாட்டோம். இந்த இரு தடுப்பு மருந்துகளும் 100 சதவீதம் பாதுகாப்பானவை. இந்த மருந்தை செலுத்தும் போது லேசான காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை லேசாக ஏற்படும். இந்த அறிகுறிகள் எந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்தினாலும் வரக்கூடிய பொதுவான அறிகுறிகள்தான். ஆனால், இந்த மருந்தைச் செலுத்தினால் மலட்டுத்தன்மை ஏற்படும் எனக் கூறுவது முட்டாள்தனமானது.

கிளினிக்கல் பரிசோதனையின் போது திரட்டப்பட்ட பாதுகாப்பு மற்றும் நோய்எதிர்ப்புக் சக்தி குறித்த புள்ளிவிவரங்கள், வெளிநாடுகளில் பரிசோதனையின் போது திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களையும் இருநிறுவனங்களும் அளித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்த இரு தடுப்பு மருந்துகளும் 70 சதவீதம் வீரியத்தன்மையுடன் இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது


இவ்வாறு சோமானி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in