

ரயில்களில் தரம் குறைந்த தண்ணீரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, வடக்கு ரயில்வே அதிகாரிகள் இருவர் மீதும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 7 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வழக்கில் சிக்கியுள்ள இரண்டு அதிகாரிகளும் வடக்கு ரயில்வே கேட்டரிங் பிரிவில் தலைமை வர்த்தக மேலாளர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, "குற்றம்சாட்டபவர்கள் வீடுகள் உட்பட 13 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இதில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் 'ரயில் நீர்' பிராண்ட் தண்ணீரை வழங்குவதற்கு பதிலாக தரம் குறைந்த தண்ணீரை வழங்கினர் என்பதே முன்னாள் அதிகாரிகள் எம்.எஸ்.சாலியா, சந்தீப் சிலாஸ் மீதான குற்றச்சாட்டு.
இவர்களைத் தவிர, ஆர்.கே.அசோசியேட்ஸ், சத்யம் கேட்டரர்ஸ், அம்புஜ் ஹோட்டல் அண்ட் ரியல் எஸ்டேட், பி.கே.அசோசியேட்ஸ், சன்சைன், பிருந்தாவன் ஃபுட் பிராடக்ட் அண்ட் ஃபுட் வேர்ல்டு ஆகிய தனியார் நிறுவனங்கள் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.