

கரோனா தொற்று காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் கடைகள், தொழில் நிறுவனங்களை வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கர்நாடகாவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் முன்பைப் போல செயல்பட முடியாததால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் வேலை இழப்பு, ஊதிய குறைப்பு, உற்பத்தி குறைவு உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து நிபுணர்களிடம் தொடர்ச்சியாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தொழில் நிறுவனங்கள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் 1961, பிரிவு 1, 2, 11, 12 ஆகியவற்றின்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், இதரவர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்கவும், செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.
இதனால் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் மேம்படும் என நம்புகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கர்நாடக அரசு செய்து தர தயாராக உள்ளது. அனைத்து நாட்களிலும் இயங்க அனுமதிக்கப்பட்டாலும் கரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.