

கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது; மக்கள் அதை எடுத்துக்கொள்ள தயங்கக்கூடாது என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே தெரிவித்தார்.
நாட்டின் சில மாநிலங்களில் இன்று கரோனா தடுப்பூசி போடப்படுவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியதாவது:
"தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று அனைவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இது அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை. எனவே தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் தயங்கக்கூடாது.
நாடு முழுவதும் நான்கு மாநிலங்களில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் சொன்னால், இது அரசாங்கத்தின் மிகவும் அதிகாரபூர்வமான குரலாக இருக்கும். இது ஒரு நல்ல வளர்ச்சியாகும், ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் உடனடியாக நாட்டிற்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும்.
இறுதியில் தடுப்பூசிக்கான ஒப்புதல் பெற்ற பிறகு, அரசாங்கத்தின் முன்னால் மிகப்பெரிய பணி காத்திருக்கிறது. அது நமது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதாகும். இதை ஒரு மகத்தான பணி என்று அழைப்பது ஒரு குறைவான கருத்தேயாகும். ஏனெனில் இது பொதுத் தேர்தல்களை நடத்துவதைப் போன்றது.
இதில் இன்னொரு முக்கியமான பணி உள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு வழங்கிய பிறகு எதிர்மறையான எதிர்விளைவுகளைச் சரிபார்க்கவும் கண்காணிக்கவும் முக்கியத்துவம் தரவேண்டும். அதற்கான தயார்நிலைக்காக குறைந்தபட்சம் சிறிது நேரமாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.