

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான பூட்டா சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
நீண்டகாலம் பொதுவாழ்க்கையில் இருந்த பூட்டா சிங், 8 முறை எம்.பியாக இருந்து, 4 பிரதமர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த பூட்டா சிங், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 7.10 மணிக்கு காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்று மாலை டெல்லி லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பூட்டா சிங் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கள் செய்தியில் “ சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட, நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பூட்டா சிங்கை தேசம் இழந்துவிட்டது.ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக குரல்கொடுத்தவர் பூட்டா சிங். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ பூட்டா சிங் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட நிர்வாகி, ஏழை மக்கள், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தவர். அவரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ விசுவாசமான தலைவரையும், மக்களுக்கு உண்மையாக சேவையாற்றியவருமான பூட்டா சிங்கை இந்த தேசம் இழந்துவிட்டது. தனது வாழ்க்கையையே இந்த தேசத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் பூட்டா சிங். அவரை என்றென்றும் நினைவு கூர்வோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்”எனத் தெரிவி்த்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் கடந்த 1934-ம் ஆண்டு மார்ச் 21-ம்தேதி பூட்டா சிங் பிறந்தார். 8 முறை மக்களவை எம்.பியாக பூட்டா சிங் இருந்தார். கடந்த 1962-ல் முதன்முதலில் ராஜஸ்தானின் ஜலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து பூட்டா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடக்கத்தில் சிரோன்மணி அகாலிதளம் கட்சியில் இருந்த பூட்டா சிங் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 1960-களில் மாறினார்.
காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்த மிகப்பெரிய தலைவராக பூட்டா சிங் இருந்தார். அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவை 1973-74களில் உருவாக்கிய பூட்டாசிங் 1978-ல் பொதுச்செயலாளராக இருந்தார்.
கடந்த 1974-ல் ரயில்வே இணையமைச்சராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டார், அதன்பின் 1976-ல் வர்த்தகத்துறை இணையமைச்சராகவும் பூட்டா சிங் இருந்தார். பின்னர் 1980ம் ஆண்டில் கப்பல் மற்றும் போக்குவரத்து துறையின் இணையமைச்சராகவும், 1982-ல் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பூட்டா சிங் பணியாற்றினார்.
இந்திரா காந்திக்கு நெருக்கமான பூட்டா சிங் கடந்த 1983-ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கேபினெட் பொறுப்புக்கு உயர்ந்தார். அதன்பின் 1984-ல் வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சராகவும் பூட்டாசிங் இருந்தார். ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது, உள்துறை அமைச்சராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டார்.
பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக கடந்த 1995-96 களில் பூட்டா சிங் இருந்தார். அதன்பின் மன்மோகன் சிங் ஆட்சியில் 2007-ல் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் தலைவராக பூட்டா சிங் 2010-ம் ஆண்டுவரை இருந்தார்.
கடந்த 1984-ம் ஆண்டு அமிர்தரஸ் பொற்கோயிலில் ப்ளூஸ்டார் ஆப்ரேஷனுக்குப்பின் கோயிலை சீரமைக்கும் குழுவுக்கும், பல்வேறு குருதுவாராக்களை சீரமைக்கும் குழுவுக்கும் தலைவராக பூட்டா சிங் இருந்தார். டெல்லியில் நடந்த சீக்கிய கலவரத்துக்குப்பின் பல குருதுவாராக்களை சீரமைத்ததில் பூட்டா சிங்கிற்கு முக்கியப் பங்கு உண்டு.
காங்கிரஸ் கட்சி 1978-ம் ஆண்டு இரண்டு பிரிவாக உடைந்தபின், காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தை தேர்வு செய்த குழுவில் பூட்டா சிஹ் முக்கியமானவர்.
கடந்த 1998-ல் தகவல்தொடர்பு துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது ஜேஎம்எம் ஊழல் வழக்கு தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2005-ல் பிஹார் ஆளுநராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டபின், ஆட்சியைக் கலைக்க பூட்டா சிங் பரி்ந்துரை செய்தபோது, அவரை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததால், அதன்பின் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.