

காஷ்மீரில் பேருந்துநிலையத்தில் தீவிரவாதிகள் வீ சிய கையெறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மக்கள் கூடியிருந்த டிரால் நகரின் பேருந்துநிலையத்தில் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். அப்போது தீவிரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி வீசப்பட்ட கையெறிகுண்டு இலக்கை தவறியது.
இலக்கு தவறிய தீவிரவாதிகளின் கையெறிகுண்டு மக்கள் கூடியிருந்த சந்தையில் வெடித்தது, இதனால் பொதுமக்களில் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.