

ஒரு இந்துவாகஇருந்தாலே அவர் தேசபக்தி உள்ளவராகத்தான் இருப்பார், அதுதான் இயற்கை, அடிப்படைத்தகுதியாக இருக்கும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஜே.கே.பஜாஜ், எம்.டி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் எழுதிய “மேக்கிங் ஆப் ஏ இந்து பேட்ரியாட்;பேக்ரவுண்ட் ஆஃப் காந்திஜிஸ் ஹிந்து ஸ்வராஜ்” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மகாத்மா காந்தியைப் பொறுத்தவரை, அவரின் தர்மமும் தேசபக்தியும் வேறுபட்டதல்ல. தாய்நாட்டின் மீதான அவரின் அன்பு அவரின் ஆன்மீக சிந்தனையிலிருந்துதான் தோன்றியது. ஆகவே, தர்மத்திலிருந்துதான் தேசபக்தி உருவாகிறது. தர்மம் என்பது மதத்தை விட பரந்ததாகும் என காந்தி கூறியிருந்தார்.
ஒருவர் இந்துவாக இருந்தால், அவர் தேசபக்தி உள்ளவராக இருப்பார். அது இந்துவாக இருப்பவரின் இயல்பான குணம், இயற்கையானது. சில நேரங்களி்ல் ஒரு இந்துவின் தேசபக்தியை நீங்கள் தட்டி எழுப்ப வேண்டியதுகூட இருக்கும். ஆனால், ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஒருபோதும் தேசவிரோதியாக இருக்கமாட்டார்.
நாம் உணர வேண்டிய உண்மை என்னவென்றால், ஒருவர் தேசத்தை விரும்புகிறார் என்றால், அவர் நிலத்தை மட்டும் விரும்புகிறார் எனும் அர்த்தம் இல்லை, மக்கள் , ஆறுகள், கலாச்சாரம், பாரம்பரியங்கள், உள்ளிட்ட அனைத்தையும் விரும்புகிறார் என்று அர்த்தம்.
ஒற்றுமையாக இருப்பதைத்தான் இந்து மதம் நம்புகிறது. வேறுபாடு என்பது பிரிவினைவாதம் அல்ல. இந்துமதம் என்பது அனைத்து மதங்களும் சேர்ந்ததுதான் என மகாத்மா காந்தி நம்பினார்.
மகாத்மா காந்தியைப் பொருத்தவரை ஸ்வராஜ்ஜியம் என்பது ஆங்கிலேயர்களை துரத்திவிட்டு, இந்தியா சுயாட்சி பெறுவதுமட்டுமல்ல. கலாச்சார மதிப்புகளின் அடிப்படையில் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதாகும்
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.