

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது
நான்காவது சித்த மருத்துவ தினம் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான 2021 ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சித்த வைத்தியத்தின் தந்தை என போற்றப்படும் சித்தர் அகத்தியரின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்படுகிறது.
முதலாவது சித்தா தினம் 2018 ஜனவரி 4-ஆம் தேதி, அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது.
இரண்டாவது சித்தா தினம் 2018 டிசம்பர் 26-லும், மூன்றாவது சித்தா தினம் 2020 ஜனவரி 13-ஆம் தேதியும் கொண்டப்பட்டது. நான்காவது சித்த மருத்துவ தினம் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான 2021 ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நான்காவது சித்தா தினத்தை ஒட்டி அனைத்து திங்கள்கிழமைகளிலும் சிறப்பு சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
ஜனவரி 2-ஆம் தேதி, நான்காவது தேசிய சித்தா தினத்தன்று, சிறப்பு சித்த மருத்துவ முகாம் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நடைபெறுகிறது. அதில் பல்வேறு நோய்களுக்கான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். சர்க்கரை நோய், இருதயக் கோளாறுகள், தைராய்டு, கால் மூட்டு வலி, கருப்பை கோளாறுகள், போன்றவற்றுக்குப் பரிசோனை நடத்தி மருந்துகள் அளிக்கப்படுகிறது.
டிசம்பர் 21-ஆம் தேதி இருமல், சைனஸ், மூக்கில் தொற்று, ஆஸ்துமா போன்ற நோய்களுக்குப் பரிசோதனைகள் செய்து மருந்துகள் தமிழகத்தின் பல நகரங்களிலும் அளிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சலுக்கும் சித்த மருந்துகள் தரப்பட்டன. டிசம்பர் 28-ஆம் தேதி சிறப்பு சித்த மருத்துவ முகாமில், கோவிட்-19 நோயில் இருந்து குணம் பெற்றவர்களுக்கு ஆரோக்கியா சுகாதாரப் பெட்டி அளிக்கப்பட்டன. ஆரோக்கியப் பெட்டகம் எனப்படும் இந்த மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவியாக இருக்கும்.
இவை தவிர சித்த மருந்துகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. மாறிவரும் தலைமுறைகளிலும் மாறாதிருக்கும் சித்த மருந்துகள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி பேச்சுப் போட்டி நடைபெற்றது. பள்ளிக்கூட மாணவர்களுக்கு சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கோஷம் உருவாக்கும் போட்டிகள் ஆன்லைனில் நடைபெற்றன.
இவற்றில் பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு கேடயங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி, சித்த மருத்துவர்களின் சிறப்பு இணையவழிப் பயிலரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்து.
கோவிட்-19-ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வேளையில், கோவிட்-19 சிகிச்சையில் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும், முன்களத்தில் பணியாற்றிய அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும் ஆயுஷ் மருத்துவ நடைமுறைகள் பெரிதும் உதவியாக இருந்தன.