Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரூ.70 ஆயிரம் கோடி பொருளாதார நஷ்டம்: தொழில் கூட்டமைப்பு தகவல்

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மூன்றாம் காலாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது.

பஞ்சாப், ஹரியாணா மாநிலவிவசாயிகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லி தொழில் வர்த்தகசபை (பிஹெச்டி சேம்பர்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் சஞ்சய் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 36 நாட்களாக விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் காரணமாக 2020-21-ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்’’ என்று தெரிவித் துள்ளார்.

டெல்லியின் எல்லைப் பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட் டுள்ளதால் அனைத்து விதமானதுறைகளுக்கான சரக்கு போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இரண்டு அம்சங்களில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. அதாவது வைக்கோலை எரிப்பதற்கு அபராதம் விதிப்பது மற்றும் மின்சார மசோதா 2020 ஆகியவற்றுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 45 லட்சம் பணியாளர்கள் பணி புரிகின்றனர். மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) அளவான ரூ.14 லட்சம் கோடியில் இத்துறையின் பங்களிப்பு ரூ.4 லட்சம் கோடியாகும். பஞ்சாப் மாநில ஜிஎஸ்டிபி ரூ.5.75 லட்சம் கோடியாகவும், ஹரியாணா மாநில ஜிஎஸ்டிபி ரூ.4 லட்சம் கோடியாகவும் உள்ளது.

உணவு பதப்படுத்துதல், ஜவுளித்தொழில், ஆட்டோ மொபைல், வேளாண் இயந்திர உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல தொழில்கள் இந்த போராட்டம் காரணமாக முடங்கியுள்ளன. இத்தொழில்களுக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x