

ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷன் என்பவரிடம் இழந்தார்.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள பில்லியனர் இண்டெக்ஸ் அறிக்கையின்படி, சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷன் சொத்து மதிப்பு இந்த ஒரே ஆண்டில் 70.9 பில்லியன் டாலர் உயர்ந்து 77.8 பில்லியன் டாலராக உள்ளது. இவருடைய இந்த சொத்து மதிப்பு உயர்வு வரலாற்றில் குறுகிய காலத்தில் மிக வேகமான வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதிகம் அறிமுகமில்லாத சாங் ஷான்ஷன், நோங்ஃபூ ஸ்ப்ரிங் என்ற மினரல் வாட்டர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ஊடகம், காளான் வளர்ப்பு, ஹெல்த்கேர் ஆகிய துறைகளிலும் தொழில் செய்து வருகிறார். இவர் ஒரே ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சியை அடைந்ததன் மூலம் ஆசியாவின் பெரும்பணக்காரர் என்ற இடத்தை முகேஷ் அம்பானியிடம் இருந்து தட்டிப் பறித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 18.3 பில்லியன் டாலர் உயர்ந்து 76.9 பில்லியன் டாலராக உள்ளது.
ஜாக் மாவின் அலிபாபா உள்ளிட்ட முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இத்தகைய வளர்ச்சியைக் கண்டுள்ளார் 66 வயதாகும் சாங்.