

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 600 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாகக் கூறி, ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.
அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், "டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் ஜனவரி 8-ம் தேதி உமர் காலித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிடுவது பற்றி உமர் காலித் ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும், இதே காலகட்டத்தில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சிஏஏ போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
அங்கும் போராட்டக்காரர்களை கலவரம் செய்ய தூண்டும் விதமாகவும் வெறுப்புணர்வூட்டும் வகையிலும் உமர் காலித் பேசியுள்ளார். அவரது பயண மற்றும் தங்கும் செலவுகளை அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களே கவனித்து வந்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.