

கருப்பு பணத்தை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட் டணி அமைத்துள்ளன. பாஜக அணி யில் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இரு அணி தலைவர்களும் பிரச்சார கூட்டங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்தப் பின்னணியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாடு களில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பேன் என்று நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இதன்மூலம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளான பிறகும் கருப்புப் பணத்தை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி துளியும் அக்கறை காட்டவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள். இவ்வாறு லாலு பிரசாத் தெரி வித்துள்ளார்.