

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2021-ம் ஆண்டின் முதல் நாளான நேற்றும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய 2 கோரிக்கைகளை வாபஸ் பெறும் கேள்விக்கே இடமில்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த30-ம் தேதி 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அமைச்சர் தோமர் கூறும்போது, ‘‘சர்ச்சைக்குள்ளான 4 விவகாரங்களில் 2-ல் ஒருமித்த கருத்துஎட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4-ம் தேதி நடக்கும். வேளாண் சட்டங்களால் ஏற்படக் கூடிய பலன்களை அவர்களிடம் விளக்கினோம். குறைந்தபட்ச ஆதாரவு விலை (எம்எஸ்பி) தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரத் தயாராக இருப்பதாக ஏற்கெனவே அரசு கூறிவிட்டது’’ என்றார். இந்நிலையில், மூத்த விவசாயிகள் தலைவர் குர்னாம் சிங் சதுனி நேற்று கூறும்போது, ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது ஆகிய 2 கோரிக்கைகளை திரும்பப் பெறும் கேள்விக்கே இடமில்லை.
பயிர்க் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டப்பிரிவு, மின்சார திருத்தச் சட்டம் ஆகியற்றை நிறுத்திவைக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், எம்எஸ்பி-க்கானஉத்தரவாதம், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுதல் ஆகிய எஞ்சிய 2 கோரிக்கைகளுக்கு மாற்றுவழி இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்’’ என்றார்.
அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில், ‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மாற்றாக புதிய யோசனைகளை பரிந்துரைக்குமாறு அரசு கூறுவது சாத்தியமற்றது. வேளாண் சந்தைகள், விவசாயிகளின் நிலம்மற்றும் உணவுச் சங்கிலி மீதானகட்டுப்பாட்டை தொழில் நிறுவனங்களின் வசம் புதிய சட்டங்கள் ஒப்படைத்துவிடும்’ என்று கூறப்பட்டுள்ளது.