

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்ததால், 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை மொத்தம் 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. இது நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக்குறைவாகும்
நாடாளுமன்ற வரலாற்றில் 50 நாட்களுக்கும் குறைவாகக் கூட்டம் 4-வது முறையாக நடந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டில் பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்காலக் கூட்டத்தொடரும் திட்டமிட்ட நாட்களில் நடக்கவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 31 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 23 நாட்கள் மட்டுமே நடந்தது.
அதேபோல, மழைக்காலக் கூட்டத்தொடரும் 18 அமர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு கூட்டப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால், 10 நாட்களோடு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. 50 நாட்களுக்கும் குறைவாக மாநிலங்களவை இதுவரை 3 முறை மட்டுமே நடந்துள்ளது.
1999-ம் ஆண்டில் 48 நாட்கள், 2004 மற்றும் 2008-ல் தலா 46 நாட்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 33 நாட்கள் நடந்தது என்பதுதான் வரலாற்றிலேயே மிகக்குறைவு, மற்றும் 4-வது முறையாக 50 நாட்களுக்கும் குறைவாக அவை நடந்துள்ளது.
கடைசியாக 1984-ம் ஆண்டு அதாவது 36 ஆண்டுகளுக்கு முன் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றில் பார்த்தால், 1979 மற்றும் 1975-ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மாநிலங்களவைச் செயலாளர் ஆய்வின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை மிகக்குறைவாக 33 நாட்கள் மட்டுமே செயல்பட்டாலும் மசோதாக்களை அதிகமாக நிறைவேற்றி 82.7 சதவீதம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் அதிகபட்ச சிறந்த செயல்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் மாநிலங்களவையில் 39 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 12 மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், 27 மசோதாக்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்களும் மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் நிறைவேற்றப்பட்டு, தற்போது விவசாயிகள் அந்த சட்டங்களை எதிர்த்து போாராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.