Last Updated : 01 Jan, 2021 02:14 PM

 

Published : 01 Jan 2021 02:14 PM
Last Updated : 01 Jan 2021 02:14 PM

இதுதான் ஜனநாயகம்: கேரளாவில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்த அலுவலகத்திலேயே பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்ற பெண் 

பத்தனாபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுள்ள ஆனந்தவள்ளி : படம் உதவி |ட்விட்டர்

கொல்லம்


கேரளாவில் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவுப் பணியாளராக வேலைசெய்த ஏ.ஆனந்தவள்ளி, சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளார்.

கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதிநேர துப்புரவு மற்றும் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர் ஆனந்தவள்ளி(வயது46). ஆனந்தவள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர். இவரின் கணவர் மோகனனும் தீவிரமான கம்யூனி்ஸ்ட் உறுப்பினர். மோகனன் பெயிண்ட்டராக பணியாற்றி வருகிறார். மோகனன், ஆனந்தவள்ளிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியிலும், கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்கள், தலைவர்கள், முக்கிய விஐபிக்களுக்கு தேநீர் வழங்குவதல், கோப்புகளை பல பிரிவுகளுக்கும் கொண்டு செல்லுதல் பணியில் இருந்த ஆனந்தவள்ளி, அந்த பஞ்சாயத்து அலுவலகத்தை நிர்வாகம் செய்யும் அளவுக்கு உயர்த்தியுள்ளது கேரளா உள்ளாட்சித் தேர்தல்.

இந்திய ஜனநாயகத்தின் சிறப்பான அம்சமே யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை கேரளா உணர்த்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பத்தனாபுரம் பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனந்தவள்ளி போட்டியிட்டார். இதில் 650 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆனந்தவள்ளி வென்றார். மொத்தமுள்ள 17 வார்டுகளில் 7 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 6 வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றது.

இதையடுத்து, பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஆனந்தவள்ளி அனைவராலும் அறியப்பட்டவர் என்பதாலும், இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால், ஆனந்தவள்ளி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

துப்புரவு பணி செய்த அலுவலகத்திலேயே பஞ்சாயத்து தலைவராக மிகுந்த பெருமையுடன், ஆனந்தவள்ளி கடந்த 30-ம் தேதி பதவி ஏற்று பணியாற்றி வருகிறார்.

பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டதுகுறித்து ஆனந்தவள்ளி நிருபரிடம் கூறுகையில் “ பகுதிநேர துப்புறவு பணியாளராக பணியாற்ற இந்த அலுவலகத்திலேயே இந்த உயர்ந்த பதவியில் அமருவேன் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் தலைவராக பதவி ஏற்றது என் கிராமத்து மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நான் வார்டு தேர்தலில்போட்டியிட முடிவு செய்தபோது, பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைவருமே என்னை ஊக்கப்படுத்தினார்கள். கடந்த வாரம்வரை நான் யாருக்கெல்லாம் தேநீர் வழங்கினேனோ அந்த அதிகாரிகள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். கூட்டங்கள் நடத்தும்போது அதை கவனித்திருக்கிறேன், பல்வேறு விஷயங்களை கவனித்ததால், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன.

அனைத்தையும் இனிமேல்படித்து விதிமுறைக்கு மாறாமல் பணியாற்றுவேன். என்னால் நிர்வாகம் சிறப்பாகச் செய்ய முடியும், மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும். என்னை நம்பி தேர்வு செய்த மக்களுக்கும், இந்த பதவிக்கும் நேர்மையாக நடப்பேன் அதுதான் என்னுடையஆசை” எனத் தெரிவி்த்தார்.

ஆனந்தவள்ளி பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். பகுதிநேர துப்புரவு பணியாளராக ரூ.2 ஆயரம் ஊதியம் பெற்று வந்த ஆனந்தவள்ளி, தற்போது பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றபின் மாதம் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெறஉள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x