

டெல்லியில் மக்களுக்கு சேவை புரிந்த கரோனா வீரர்களை வணங்குகிறேன் என்று அர்விந்த் கேஜ்ரிவால் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும்
நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இதுகுறித்து வீடியோவில் தோன்றி கூறியதாவது:
"கரோனா போர்வீரர்களை நான் வணங்குகிறேன். டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், அனைத்து சமூக மற்றும் மத அமைப்புகள், நீங்கள் அனைவரும் நோய்த்தொற்றுகளின்போது முன்னின்று மக்களுக்கு சேவை செய்தீர்கள்.
இந்த புதிய ஆண்டு புதிய நம்பிக்கையுடன் வந்துள்ளது, எனவே மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள். உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ”
டெல்லியின் மருத்துவமுறை மிகவும் வலுவானதாகும். உலகிற்கு முன்னால் பல எடுத்துக்காட்டுகளை தந்துள்ளது. மற்ற நாடுகள் அந்த உதாரணங்களை பின்பற்றியுள்ளன. உலகின் எந்த வளர்ந்த நாட்டையும் விட நாங்கள் குறைவாக இல்லை என்பதை டெல்லி நிரூபித்தது.
இந்த ஆண்டுதான் நோய்த்தொற்றைக் கடந்துசெல்லாமல் உள்ளது. எனவே, நாம் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடுப்பூசி விரைவில் இந்தியாவை எட்டும், எல்லாம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று நாம் நம்புகிறோம், கரோனா வீரர்கள் மக்களை காக்கும் அதேநேரம் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.''
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.