Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி

புதுடெல்லி

அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து (ஐசிஎம்ஆர்) ‘கோவாக்ஸின்’ என்ற பெயரில் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தடுப்பு மருந்து பற்றிய விவரங்களை மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழுவிவிடம் வழங்கி உள்ளன. பைஸர் நிறுவனம் தனது தயாரிப்பு குறித்த விவரங்களை அளிக்க சிறிது கால அவகாசம் கோரியுள்ளது. இந்தக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுமதிக்காக அனுப்பப்படும்.

இந்தியாவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஒத்துழைப்போடு தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு முதலில் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. இது இந்தியா முழுமைக்கும் அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக 5 கோடி தடுப்பூசிகள் தயாரித்து அளிக்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்படும். பிற நாடுகளுக்கு அனுப்புவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யூஹெச்ஓ) அனுமதி பெற வேண்டும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் சோதனை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை முதல் (ஜன.2) தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் தடுப்பூசி போடுவதற்கான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எந்த கால இடைவெளியில் தடுப்பு ஊசி போடும் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது முடிவு செய்யப்பட்டு பிறகு உண்மையான தடுப்பு ஊசி போடப்படும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் நேற்று ஆலோசனை நடத்தினார். இது இரண்டாம் கட்ட சோதனை நடவடிக்கையாகும். ஏற்கெனவே முதல் கட்டமாக டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் எவ்வித இடையூறும் இன்றி ஒத்திகை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் அமல்

ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் தடுப்பூசி போன்ற (டம்மி) ஊசி மருந்து போடப்பட்டது. ‘‘தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கைகள் திருப்திகரமாக நடைபெற்றுவிட்டன. நாடு முழுவதும் இனி உண்மையான தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வேண்டியதுதான்’’ என்று மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் டாக்டர் விஜி சோமானி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகு, நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறையும். அத்துடன் மக்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x