மும்பை பிசிசிஐ அலுவலகம் முற்றுகை: சிவசேனா ஆர்ப்பாட்டம்

மும்பை பிசிசிஐ அலுவலகம் முற்றுகை: சிவசேனா ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனா கட்சியினர் முற்றுகையிட்டனர்.

மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா கட்சியினர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தடைபட்ட கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய பிசிசிஐ தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி தலைவரும் இன்று மும்பையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருந்தனர்.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் அமைந்துள்ள பிசிசிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 'திரும்பிச் செல் ஷாரியார் கான்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி வந்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்தவே கூடாது என வலியுறுத்தும் வகையில் கருப்புக் கொடியை சிவசேனா கட்சியினர் ஏந்தி வந்தனர். இதனால், மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் டெல்லியில் பேச்சுவார்த்தையை தொடர பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரியின் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திரா குல்கர்னி மீது சிவசேனா கட்சியினர் மை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அச்சம்பவம் நடைபெற்ற அடுத்த ஒரே வாரத்தில் சிவசேனா பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in