

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்ட எல்லையில் 12 இந்திய எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று சிறியரக பீரங்கி குண்டு களை வீசியது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கிய தாக்குதல் நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்திய எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றுமுன்தினம் இதே சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தி யதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.