

16-மக்களவையின் சபாநாயகராக எல்.கே.அத்வானி பொறுப்பேற்பாரா அல்லது சுமித்ரா மகாஜன் பொறுப்பேற்பாரா என்ற கேள்விக்கு பல வார காலமாக பதில் எதிர்பார்த்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மீரா குமாருக்கு அடுத்து, மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் இரண்டாவது பெண்மணி சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இவரைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
இவர் மகாராஷ்ட்ராவின் சிப்லுன் பகுதியில் 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி பிறந்தார். சட்டம் பயின்ற இவர், இந்தூர் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டம் பெற்றார்.
தனது அரசியல் வாழ்க்கையை 1982-ஆண்டு இந்தூரின் மாநகராட்சி மன்றக் கூட்டுறவு குழு உறுப்பினராக தொடங்கினார். பின், 1984-ஆம் ஆண்டு இந்தூரின் துணை மேயராக பொறுப்பேற்றார். அத்தொகுதி மக்களால்‘தாய்’(Tai) என்று அன்பாக அழைக்கப்படுபவர் சுமித்ரா. அந்த ஊர் மொழியில் தாய் என்பதற்கு சகோதரி என்று அர்த்தம்.
1989-ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த மக்களவைத் தேர்தலிலிருந்து தொடர்ந்து எட்டு முறை (1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, மற்றும் 2014) வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், தனது தொகுதியில் 4.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இது மத்தியப் பிரதேசத்தில் வென்றவர்களிலே அதிகமான வாக்கு வித்தியாசமாகும்.
அரசியல் வட்டாரத்தில் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர், நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கேபினட் அமைச்சராக இருந்த இவர், 2002 முதல் 2004 வரை மனிதவளத் துறை, பெட்ரோலியம், தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றையில் பதவி வகித்துள்ளார்.
புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது, நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக கருதும் சுமித்ரா மகாஜன், பாட்டு பாடுவதில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.