Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

காஷ்மீரின் பிடிபி தலைவர் வாஹீத் ஹிஸ்புல் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி: தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்

ஹிஸ்புல் தீவிரவாத அமைப்புக்கு, காஷ்மீரின் பிடிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்துள்ளார் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன், காஷ்மீரின் துணை எஸ்.பி. தேவேந்திர சிங் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹிஸ்புல் தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற போது கடந்த ஜனவரி மாதம் அவர் பிடிப்பட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேவேந்திர சிங் மூலம் ஹிஸ்புல் அமைப்புக்கு மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், கடந்த நவம்பர் மாதம் வாஹீத்தை என்ஐஏ கைது செய்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, என்ஐஏ அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினரின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) சேர்ந்த மூத்த தலைவர் வாஹீத் உர் ரகுமான் பரா, ஹிஸ்புல் அமைப்புக்கு துணை எஸ்.பி. தேவேந்திர சிங் மூலம் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். புல்வாமா தொகுதியில் வெற்றி பெற்ற வாஹீத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.

வாஹீத் மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வாஹீத், இது அரசியல் உள்நோக்கத்துக்காக கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகள் என்று கூறிவருகிறார். இதுகுறித்து வாஹீத்தின் வழக்கறிஞர் டி.என்.ரெய்னா, கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும், வாஹீத்துக்கு ஜாமீன் கோரி, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ரூ.10 லட்சம்

துணை எஸ்.பி. தேவேந்திர சிங் மூலம், ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த சயத் முஸ்டாக் நவீத் (எ) நவீத் பாபுவுக்கு பணம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த போது, தேவேந்திர சிங்கிடம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை டிபன் பாக்ஸில் மறைத்து பின்னர் நவீத் பாபுவிடம் வழங்கி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x