Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நெருடல்; தேஜஸ்வியை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்துங்கள்: நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி யோசனை

பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதள தளம் (ஆர்ஜேடி) யோசனை தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த(ஐஜத) 7 எம்எல்ஏக்களில் 6 பேர்சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இது பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் நடவடிக்கைக்கு ஐஜத எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் பிஹார் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யாரையாவது தேர்வு செய்யட்டும் என்றும் நிதிஷ் குமார் கூறி இருந்தார்.

இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் உதய்நாராயண் சவுத்ரி நேற்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக பெரிய மீனாகஇருந்துகொண்டு மற்ற கட்சிகளான சிறிய மீன்களை விழுங்கி வருகிறது. இதனால்தான் சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது ஐஜதவையும் பாஜக விழுங்கப் பார்க்கிறது. பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு, தேஜஸ்வி யாதவை முதல்வராக்க நிதிஷ் குமார் முன்வர வேண்டும். அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவரை பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்னிறுத்துவோம்’’ என்றார்.

இதுகுறித்து பிஹார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறும்போது, ‘‘ஆர்ஜேடி பகல் கனவு காண்கிறது. முதலில் காங்கிரஸுடனான உறவை ஆர்ஜேடி சுமுகமாக பார்த்துக் கொள்ளட்டும். உதய் நாராயண் சவுத்ரி ஆர்ஜேடி கட்சியில் முக்கியத்துவம் இழந்துவிட்டார். தேஜஸ்வி யாதவின் கவனத்தை ஈர்க்க இதுபோன்று பேசுகிறார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x