எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல்
ஜம்முவில் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் எல்லைப்பகுதியில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
இத்தாக்குதல் தொடர்பாக ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். 9 நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பீரங்கிக் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
கோடா, மங்கு, ராகல், சல்யாரியான் பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருந்தது. நேற்றிரவு (வெள்ளி இரவு) தொடங்கிய இத்தாக்குதல் சில இடங்களில் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இத்தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், எல்லைப் பகுதியில் வேலி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்" என்றார்.
முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் மங்கு சக் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் தாக்குதலை பாகிஸ்தான் தரப்பு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் அத்துமீறலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியிருக்கிறது.
