

பிரதமர் மோடியின் நீண்டகால அசத்தியாகிரக (பொய்) வரலாற்றால், அவர் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆன்லைன் ஆய்வு ஒன்றையும் நடத்துகிறார். அதில் ஏன் வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி திரும்பப் பெற மறுக்கிறார் என்று மக்களிடம் கேள்வி எழுப்பி, அதற்கான பதிலையும் அளித்து ஆய்வு நடத்துகிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன விழாவில் கூட ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. விவசாயிகள் போராட்டத்துக்குத் தீவிரமான ஆதரவு அளித்துவந்த ராகுல் காந்தி, திடீரென வெளிநாடு சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ ‘ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன்’, ‘ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’, ‘50 நாட்கள் கொடுங்கள்’, ‘21 நாட்களில் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல முடியும்’, ‘யாரும் நமது எல்லைக்குள் நுழையவில்லை, எதையும் பிடிக்கவில்லை’ போன்ற பிரதமர் மோடியின் நீண்டகால அசத்தியாகிரக (பொய்) வரலாற்றால், அவர் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கையில்லை” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆன்லைன் சர்வே நடத்துகிறார். அதில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெற மறுக்கிறார். ஏனென்றால் என்று குறிப்பிட்டு அதில் 3 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. முதல் வாய்ப்பில் விவசாயிகளுக்கு எதிரானவர், 2-வது வாய்ப்பில் அகங்காரம், 3-வது வாய்ப்பில் அனைத்தும் சேர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.