ராமர் கோயிலின் அடியில் சரயு நதி: உறுதியான அடித்தளத்துக்கு ஐஐடிக்களிடம் ஆலோசனை கேட்ட அறக்கட்டளை

ராமர் கோயில் மாதிரிப் படம்.
ராமர் கோயில் மாதிரிப் படம்.
Updated on
1 min read

ராமர் கோயில் கட்டப்பட உள்ள பகுதிக்கு அடியில் சரயு நதி பாய்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், கோயிலின் உறுதியான அடித்தளத்துக்கு ஐஐடிக்களிடம் ராமர் கோயில் அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது

முழுக்க முழுக்கக் கற்களால் மட்டுமே ராமர் கோயில் கட்டப்பட உள்ளதால் காற்று, சூரியன், நீர் என எதன் மூலமும் கோயில் சேதமாகாது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் நிலைத்திருக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், கோயில் கட்டப்பட உள்ள பகுதிக்கு அடியில் சரயு நதி பாய்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் கட்டுவதற்காகத் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்ட வடிவமைப்பிலேயே கட்டுவது சாத்தியப்படாது. இதுகுறித்து பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தலைமையிலான கோயில் கட்டுமானக் குழு விவாதித்துள்ளது.

இந்நிலையில் கோயிலின் உறுதியான அடித்தளத்துக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

2023ஆம் ஆண்டில் ராமர் கோயிலைக் கட்டி முடிக்க ராமர் கோயில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in