

மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசை அமலாக்கப் பிரிவைப் பயன்படுத்திக் கவிழ்த்துவிடலாம் என்ற மூடநம்பிக்கையை வைக்கக்கூடாது என்று பாஜகவுக்கு சிவசேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தை, பிஎன்பி வங்கி மோசடி விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி 3 முறை அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், வர்ஷா ராவத் ஆஜராகவில்லை. அரசியலில் எதிர்ப்பவர்கள் பணிய மறுத்தால், அவர்களை அமலாக்கப் பிரிவு மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என்று சிவசேனா சாடியிருந்தது.
ஆனால், பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், “அமலாக்கப் பிரிவு அரசியல் அமைப்புடன் சாராதது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சஞ்சய் ராவத்துக்கு நம்பிக்கையில்லையா என்று சந்திரகாந்த் பாட்டீல் கேட்டார். ஏனென்றால், அமலாக்கப் பிரிவு அரசியல் சாராதது, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்தார்.
நாங்கள் கேட்கிறோம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி பாட்டீல் மிகவும் கவலைப்படுகிறார்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்த இந்தக் கேள்வியை ஆளுநரிடம் கேளுங்கள். 12 எம்எல்சி பதவி ஆளுநருக்கான கோட்டாவில் காலியானபோது அதை நிரப்புவதற்கு ஜூன் மாதம் அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், அதை இன்னும் நிரப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
2020-ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை பாஜக செய்தும் அது தோல்வியில் முடிந்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கும் ஆளுநரின் விருப்பம் நிறைவேறாது.
மகாராஷ்டிர அரசை அமலாக்கப் பிரிவு மூலம் மிரட்டிக் கலைத்துவிட முடியும என்ற மூடநம்பிக்கையிலிருந்து முதலில் பாஜக வெளிவர வேண்டும். பாஜகவிலிருந்து வெளியேறிய ஏக்நாத் கட்ஸேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. தெலுங்குதேசம் கட்சி எம்.பி. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்தி, அவரைப் பாஜகவில் சேரவைத்தார்கள்.
சரத் பவார், சஞ்சய் ராவத், ஏக்நாத் கட்ஸே, சர்நாயக் அல்லது மகா விகாஸ் அகாதி எம்எல்ஏக்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் விபரீதம் உச்சமாக இருக்கும். அமலாக்கப் பிரிவின் நோக்கம் சரியானதாக, சட்டப்படி இருந்தால், அதற்குக் கட்டுப்படுவார்கள். இல்லாவிட்டால், சட்டவிரோத உத்தரவுகளுக்குப் பணிய வேண்டியது இல்லை''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.