

குஜராத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 9.46 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் குறித்து காந்தி நகரை மையமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கச்சில் உள்ள காவ்தா கிராமத்தின் கிழக்கு தென்கிழக்கில் இன்று காலை 9.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காவ்தா கிராமத்தின் 26 கிலோ மீட்டர் தொலைவில் அதன் மையப்பகுதியில் ஆழங்கொண்டிருந்த இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக இருந்தது.
இந்த நிலநடுக்கத்திற்கு முன்னதாக, அதிகாலை 2.29 மணியளவில கட்ச் அருகே பகாவு நகரத்தில் 2.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவ்வாறு காந்தி நகர் நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்தச் சேதமும் இல்லை
கட்ச்-வெஸ்ட் பிரிவின் காவல் கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''காவ்தா கிராமத்தின் தென்கிழக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடக்கு கச்சின் பாலைவனப் பகுதியைத் தாக்கியுள்ளது. இப்பகுதியில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதேநேரம் இங்கு உணரப்பட்ட நிலநடுக்கம் சற்றே தீவிரத்தன்மை குறைவாக இருந்ததால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.