Last Updated : 30 Dec, 2020 12:39 PM

 

Published : 30 Dec 2020 12:39 PM
Last Updated : 30 Dec 2020 12:39 PM

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ரகசிய இடங்கள் கண்டுபிடிப்பு: துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல்

காஷ்மீரில் பூஞ்ச் சர்வதேசக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லையோர கிராமத்திலிருந்து தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள டப்பி கிராமத்தில் ஒரு தீவிரவாதியின் மறைவிடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பூஞ்ச் மூத்த காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் அங்க்ரல் புதன்கிழமை கூறியதாவது:‘

''ஞாயிற்றுக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினர் பூஞ்ச் பகுதி கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் மூன்று கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதியின் கூட்டாளிகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பூஞ்சில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லையோர கிராமத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களின் கூட்டாளியான யாசீன் கானிடம் விசாரித்தபோது, அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு தீவிரவாதிகளின் ரகசிய இடங்கள் குறித்த முக்கியத் தடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதன் பின்னர் துணை பிரதேச காவல்துறை அதிகாரி (எஸ்.டி.பி.ஓ) மெந்தர், ஜாகீர் ஜாஃப்ரி தலைமையிலான காவல்படையினர், ராணுவத்துடன் இணைந்து தேடல் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது டப்பி கிராமப் பகுதியில் புதர்களுக்குள் அமைக்கப்பட்ட தீவிரவாதிகளின் ரகசிய இடங்களிலிருந்து பாலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.

இதில் 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள், 70 புல்லட் ரவை குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேடல் பணி நடந்து வருகிறது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தாக்குதல்கள் நடத்த தீவிரவாத அமைப்புகள் தீட்டிய சதித்திட்டங்கள் தக்க நேரத்தில் முறியடிக்கப்பட்டன''.

இவ்வாறு மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x