2021-ம் ஆண்டு ஜனவரியில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை:  தமிழகத்தில் எத்தனை நாள்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள வங்கிகள் மொத்தம் 12 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும்.

இது தவிர அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகையையொட்டி விடுமுறை விடுவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும். பிராந்திய விடுமுறை நாட்களிலும் மாநிலங்களில் செயல்படும் வங்கிகள் இயங்காது. இதனால் மாநிலத்துக்கு மாநிலம் வங்கிகளுக்கான விடுமுறை தினங்களின் எண்ணிக்கை வேறுபடும்.

2021-ம் ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறையும், தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு பிராந்திய விடுமுறையைச் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது.

புத்தாண்டு அன்று ஒரு நாள் விடுமுறை, தைத்திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் எனப் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை, குடியரசு தினத்துக்கு ஒரு நாள் விடுமுறை என 5 நாட்கள் விடுமுறையும், 7 நாட்கள் வார விடுமுறையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் விடுமுறை வருகிறது.

ஆதலால், மக்கள், வர்த்தகர்கள், ஓய்வூதியதாரர்கள், மாத ஊதியம் பெறுவோர் வங்கிகளின் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு தங்களது வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது சிறந்ததாகும்.

பிராந்திய அளவில் மேற்கு வங்கத்தில் ஜனவரி 23-ம் தேதி நேதாஜி பிறந்த நாள், விவேகானந்தர் பிறந்த நாள் ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாநிலத்துக்கு மாநிலம் பிராந்திய விடுமுறை நாட்கள் மாறுகிறது.

ஒட்டுமொத்தமாக 16 நாட்கள் ஜனவரி மாதத்தில் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021, ஜனவரியில் வங்கி விடுமுறை நாட்கள் (தமிழகம்)

ஜனவரி 1 புத்தாண்டு தினம்
ஜனவரி 3 ஞாயிறு
ஜனவரி 9 இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 10 ஞாயிறு
ஜனவரி 14 பொங்கல்
ஜனவரி 16 உழவர் திருநாள்
ஜனவரி 15 திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 ஞாயிறு
ஜனவரி 23 நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 24 ஞாயிறு
ஜனவரி 26 குடியரசு தினம்
ஜனவரி 31 ஞாயிறு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in