பிஹார் முதல்கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு: வன்முறையின்றி அமைதியாக நடந்தது

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு: வன்முறையின்றி அமைதியாக நடந்தது
Updated on
2 min read

பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் 57 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துணை தேர்தல் ஆணையர் (பிஹார் மாநில பொறுப்பாளர்) உமேஷ் சின்ஹா டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 49 தொகுதிகளில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒருசில இடங்களில் சிறிய அளவில் மோதல் சம்பவங்கள் நடந்தாலும், ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இதற்கு முன் இல்லாத வகையில் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தத் தொகுதிகளில் கடந்த 2010-ல் நடந்த தேர்தலில் 50.85 சதவீத வாக்குகள் பதிவாயின. 2009 மக்களவைத் தேர்தலில் 44 சதவீதமும், 2014 மக்களவைத் தேர்தலில் 55 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக சமஸ்திபூர் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலில் இது 54 சதவீதமாக இருந்தது. இந்த முறை பெண்கள் அதிக அளவில் (59%) தங்கள் வாக்குகளை செலுத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மொத்தம் 243 உறுப்பினர் களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 49 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது. மொத்தம் 54 பெண்கள் உட்பட 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.35 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில்கொண்டு வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டது. அதாவது 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மேலும் 4 தொகுதிகளில் மாலை 4 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 36 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 13,212 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 7,384 மையங்கள் பதற்றமானவை என்றும் 2,255 மையங்கள் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்தவை என்றும் அடையாளம் காணப்பட்டி ருந்தன.

தேர்தல் நடைபெற்ற பகுதி களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5 ஹெலிகாப்டர்கள், 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தங்கள் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை எனக்கூறி 9 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரரும் கட்சியின் மாநில தலைவருமான பசுபதி குமார் பராஸ், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஷகுனி சவுத்ரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங், மாநில அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

இந்தத் தேர்தலில் ஆளும் ஐஜத-வின் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாஜக-வும் ராம் விலாஸ் பாஸ்வான், முன்னாள் முதல்வரும் ஐஜத அதிருப்தி தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு தேர்தலின்போது, இந்த 49 தொகுதிகளில் 29 தொகுதிகளை ஆளும் ஐஜத கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. வரும் 16-ம் தேதி 2-வது கட்டத் தேர்தலும், 28-ம் தேதி 3-வது கட்ட தேர்தலும், நவம்பர் 1-ம் தேதி 4-வது கட்ட தேர்தலும் நவம்பர் 5-ம் தேதி 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலும் நடக்கின்றன. நவம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in