

“செவ்வாய் கிரகத்தை போலவே வேறு கிரகங்களிலும் தண்ணீர் இருக்கலாம்” என்று ‘நாசா’வில் பணிபுரியும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வில் பணி யாற்றுபவர் அமிதாப் கோஷ். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கோரக்பூர் ஐஐடியில் படித்தவர். தனது 27-வது வயதிலேயே கடந்த 1997-ம் ஆண்டு நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய ‘பாத் ஃபைண்டர்’ திட்டத்தில் பணியாற்றியவர். இப்போது செவ்வாய் கிரகத்தை ஆராயும் ரோவர் திட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
வேற்று கிரகங்களில் மனிதர் கள் வாழும் சூழல் உள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து கோஷ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாசா நடத்திய ஆய்வுகளில், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. அதேபோல் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் புளூட்டோ, சனி, வியாழன் கிரகங்களிலும் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. விண்ணுக்கு அனுப்பியுள்ள நமது செயற்கை கோள்கள் பல சிக்னல்களை அனுப்பி உள்ளன. அந்த கிரகங்களில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் சிக்னல்கள் மூலம் தெரிய வருகின்றன. இது வேற்று கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழலாம் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
அதேநேரத்தில் வேற்று கிரகங்களில் தண்ணீர் இருப்பதாலேயே அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று உறுதி அளிக்க முடியாது. செவ்வாயில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது எங்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை தந்தது. மேலும் 2030-ம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்தில் சில பாறைகளை சேகரித்து வந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அமிதாப் கோஷ் கூறினார்